வல்லமையின் வார்த்தை

தேவனாகிய யாவேயின் சுபாவங்கள்.


யாவேயாகிய ஒரே தேவன், தாம் உண்டாக்கின மனுஷன் தம்மை அறியவேண்டும் என்பதில் மிகவும் பிரியப்படுகிறார். தேவவாக்கினர் எரேமியாவுக்கூடாக இதை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்.

எரேமியா 9: 23,24
ஞானி தன் ஞானத்தைக்குறித்து புழுகவேண்டாம்; பலசாலி தன் பராக்கிரமத்தைக்குறித்து புழுகவேண்டாம்; பணக்காரன் தன் ஐசுவரியத்தைக்குறித்து புழுகவேண்டாம்;

புழுகுகிறவன்; பூமியிலே தயவையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற யாவே நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே புழுகக்கடவான் என்று யாவே சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யாவே சொல்லுகிறார்.


ஒரு சுபாவம் (Character) என்பது ஒரு ஆளை அடையாளப்படுத்தும், அந்த ஆளுக்குரிய சிறப்பியல்பு ஆகும். தேவனாகிய யாவே தன்னுடைய சுபாவங்கள் மூலம் மனுஷர்கள் தம்மை அறியும்படி செய்திருக்கிறார்.

தேவனுடைய சுபாவங்களை அறிந்துகொள்ள நாம் நேரம் ஒதுக்குவது ஏன் அவ்வளவு முக்கியம்?

அதியுயர்ந்த தேவனுடைய அற்புதமான சுபாவங்களை ஆழமாக நாம் அறியும்போது நம்முடைய நாளாந்த வாழ்க்கையிலே அசைக்கமுடியாத நம்பிக்கையையும், தைரியத்தையும், சந்தோஷத்தையும் நமக்குக் கொடுக்கிறது. சோதனைகளின் நாட்களில் அதை மேற்கொள்வதற்கான பெலத்தையும் கொடுக்கிறது.

இக்கட்டான சூம்நிலையின்போது தேவனைப்பற்றிய அறிவை இழந்த மக்களைப் பற்றி சில உதாரணங்கள் வேதப்புத்தகத்திலே நாம் பார்ககமுடியும்.

ஆபகூக் 1 : 12-13
யாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; யாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.

தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்கமாட்டீர் பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?


2 நாளாகமம் 20: 1-9
இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.

சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

அப்பொழுது யோசபாத் பயந்து, யாவேயைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.

அப்படியே யூதா ஜனங்கள் யாவேயிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் யாவேயைத்தேட வந்தார்கள்.

அப்பொழுது யோசபாத் யாவேயுடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று:

எங்கள் பிதாக்களின் தேவனாகிய யாவே, வானங்களிலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது.

எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?

ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய பெயருக்கென்று ஒரு பரிசுத்த இடத்தைக் கட்டினார்கள்.

எங்கள்மேல் வாள், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய பெயர் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது பிரசன்னத்திலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு விடுவிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.


நாம் அதியுயர்ந்த தேவனுடைய சுபாவங்களை அறிந்து கொள்வது, அவருடைய நன்மைக்காக அல்ல. அது நம்முடைய நன்மைக்காகத்தான். நாம் தொழுதுகொள்ளும் தேவன் எப்படிப்பட்டவர்? என்று அறிந்து நம்முடைய நம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

இந்த தேவனுடைய சுபாவம் இரண்டு வகையாக இருக்கிறது.

01. தாம் உண்டாக்கின படைப்புக்களோடு பகிர்ந்து கொள்ளப்பட்ட சுபாவங்கள்.

02. தமக்கு மட்டுமே உரிய தனித்துவமான சுபாவங்கள்.

தேவனுடைய சுபாவங்கள்


01. தேவன் தானாகவே வாழ்கிறார். - God is Self-existent


அதியுயர்ந்த தேவனுக்கு தொடக்கமும் இல்லை முடிவுமில்லை.
பயணம் 3: 14ல் மோசேயுடனேகூட தேவன் பேசும் போது, 'இருக்கிறவராக இருக்கிறேன்' என்றும்,

ஏசாயா 43: 13ல் நாள் உண்டாகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன். என்றும் தம்மைக்குறித்துக் கூறியிருக்கிறார்.

தாம் உண்டாக்கின சிருஷ்டிப்புகள் எதுவுமே அவர் இயங்குவதற்குத் தேவையில்லை. எதிலுமே அவர் தங்கியிருக்கவுமில்லை.

சிருஷ்டிப்புகள் யாவுமே அவருக்கு மகிமையையும் சந்தோஷத்தையும் கொண்டுவருகிறது.

அவருக்கத் தேவையானது ஒன்றுமில்லை. அவர் மனுஷனை உண்டாக்கினது ' ஐயோ மனுஷன் இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்பதற்காக அல்ல. மனுஷன் உண்டாக்கப்பட்டது – தம்மை வெளிப்படுத்தி, தம்மோடு நெருங்கிப் பழகுவதற்காகத்தான்.

அப்போஸ்தலர் 17: 24-25
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் எஜமானாய் இருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்கிறவர் அல்ல.

எல்லாருக்கும் உயிரையும், சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடை கொள்ளுகிறதுமில்லை.


பாடல் 90 : 2
மலைகள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.


யோவான் 17 : 5
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.


யோவான் 17 : 24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.


ஏசாயா 43 : 7
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.


02. அவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. - God is Omniscient


அவருடைய அறிவுக்கு எல்லை இல்லை. தொடக்கம் இருந்து முடிவுவரை சகலத்தையும் அவர் அறிந்திருக்கிறார்.

அவர் ஒருபோதும் எதையும் கற்றுக்கொள்வதில்லை. கற்றுக்கொள்ள வேண்டியதுமில்லை.

எதுவும் அவருக்கு ஆச்சரியமானதுமில்லை.

தேவன் நித்தியமாய் இருப்பதினால், முடிவை ஆரம்பத்திலிருந்தே அவர் அறிவார். கடந்து போன , நடந்து கொண்டிருக்கும், இன்னும் நடக்காத எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அனைத்துக் காரியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.

நமது செயல்கள், யோசனைகள், கனவுகள் மற்றும் நம்முடைய வாயிலிருந்து ஒரு சொல் வருவதற்கு முன்பதாகவே அவர் அறிந்திருக்கிறார். என்று தாவீது தன்னுடைய பாடலில் கூறியிருக்கிறான்.

பாடல் 139: 1-4
யாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, யாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

அவருடைய அறிவு அவதானிப்பு மூலமாகவோ அல்லது காரணகாரியம் மூலமாகவோ பெறப்பட்டதல்ல. அவர் நித்திய தேவனாயிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிந்திரக்கிறார்.


ஏசாயா 65 : 24
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.


ஏபிரெயர் 4 : 13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

(மத் 11: 21, ரோ 11: 33) எங்களுடைய ஒவ்வொரு வீழ்ச்சியையும், ஒவ்வொரு பாவத்தையும், பின்வாங்குதலையும் அவர் அறிந்திருக்கிறார்.

அதியுயர்ந்த தேவன் அனைத்தையும் அறிந்திருக்கிறார். நாமோ அறியாதவர்கள் எனவே நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கவேண்டிய அனைத்து தீர்மானங்களுக்கும், முடிவுகளுக்கும் அவருடைய சித்தத்தையும் வழிநடத்துதலையும் கேட்டறிந்து செயல்ப்படுவது மிகவும் முக்கியமாக இருக்கிறது.

ரோமர் 5: 8
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.


1 யோ 3: 16
அவர் தம்முடைய வாழ்க்கையை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக வாழ்க்கையைக் ;கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.


1 யோ 4: 9,10
தம்முடைய ஒரேபேறான மகனாலே நாம் வாழும்;படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய மகனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.


அதியுயர்ந்த தேவனுடைய அறிவு, மனிதனடைய ஞானத்தின் முட்டாள் தன்மையையும், தாழ்வுநிலையையும் காட்டுகிறது.

எரேமியா 16: 17
என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.


நீதி 3: 5,6
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யாவேயில் நம்பிக்கையாயிருந்து,

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னை சரியான பாதையிலே நடத்துவார்.


1 கொரி 1: 20-24
ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இந்த உலகத்தின்; தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?

எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.

யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;

நாங்களோ மரத்தில் அறையப்பட்ட மெஷாயாவை அறிவிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.

ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் மெஷாயா தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.


3. அவர் இல்லாத இடம் இல்லை. - God is Omnipresent


தேவன் ஒருநேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் இருப்பவரல்ல. அவரது முழுமையில் அவர் எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்கிறவர்.

அவருடைய சிருஷ்டிப்புக்கள் அனைத்திலும் அவர் நிறைந்திருக்கிறார். அவரது பிரசன்னம் இல்லாத இடமில்லை.

அவருடைய பிரசன்னம் பல்வேறுபட்ட அளவுகளில் உள்ளது.

அவருடைய பிரசன்னத்திலிருந்து ஒருவர் தப்பிக்கக்கூடிய நேரமோ அல்லது சூழ்நிலையோ இல்லை.

உதாரணமாக :
ஆதாம் ஏவாள் பாவத்தின் பின்னர் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அனால் அது தேவனுக்கு மறைந்த காரியமா?

யோனா அவருடைய சமூகத்தைவிட்டு ஓடி தப்ப முயற்சித்தான் ஆனாலும் அவன் வெற்றி பெறவில்லை.

தாவீது தன்னுடைய பாடலில் இதைக்குறித்து தெளிவாய் கூறியிருகிறான்.

பாடல் 139: 7 – 10
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடை பிரசன்னத்தை விட்டு எங்கே ஓடுவேன்?

நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,

அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.


எரேமியா 23 : 23 -24
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யாவே சொல்லுகிறார்.

எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று யாவே சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று யாவே சொல்லுகிறார்.


ஆமோஸ் 9 : 1 – 4
எஜமான் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்;. அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.

அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;.

அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.


அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோடப் வாளுக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.

எபிரெயர் 13: 5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் வாழ்ந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


பாடல் 15 : 3
நான் உம்முடைய இரக்கங்களின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.


பாடல் 119 : 168
உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.


தேவன் யோசப்புடனே சிறைச்சாலையில் இருந்தார். தானியலுடன் சிங்கத்தின் குகையிலும் இருந்தார். நெகேமியா பேரரசரின் அரண்மனையில் இருந்தபோதும், எஸ்தர் ராஜாவுக்கு முன்பாக நிற்கும் போதும், பவுலின் கப்பல் சேதத்தின் போதும்கூட அவர்கள் ஒவ்வொருவருடனும் தேவன் கூட இருந்தார்.

இது நம்முடைய இருதயத்திலே நம்பிக்கையையும், தேவனைப் பற்றிய பயத்தையும் நமக்குக் கொண்டுவருகிறது.

4. எல்லாவற்றையும் செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர். - God is Omnipotent


இது அவருடைய சர்வ வல்லமையைக் குறிக்கிறது. அவரால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமில்லை.

எரேமியா 32: 17
ஆ, யாவேயாகிய எஜமானே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.


ஆனாலும் தேவன் தமக்கு இணக்கமில்லாத, தம்முடைய சித்தத்திற்கு மாறான காரியங்களை செய்யமாட்டார்.

உதாரணம் : தேவன் பொய் சொல்ல மாட்டார். அநீதியாக நடக்க மாட்டார். அவர் தமது வார்த்தையிலோ, வாயினால் கொடுத்த உறுதிகளிலோ பின்வாங்கவோ அல்லது மாறவோமாட்டார்.

எண்கள் புத்தகம் 23: 19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல் மனம்மாற அவர் ஒரு மனுஷனின்மகனும் அல்ல அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?


பாடல் 89: 35
ஒருதடவை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.


ஏசாயா 59: 1, 2
இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் யாவேயுடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.


'சர்வ வல்லவர்' என்று வேதப்புத்தகத்திலே 56 தடவைகள் கூறப்பட்டுள்ளது. தேவனுக்கு முழு உலகத்தையும் உண்டாக்குவது, ஒரு வண்ணாத்திப்பூச்சியை உருவாக்குவதைவிட கடினமானது அல்ல. காரணம் அவர் ஒருபோதும் சோர்வடைவதில்லை.

ஏசாயா 40: 28
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த யாவேயாகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.


அவருடைய சர்வ வல்லமை அவருடைய சிருஷ்டிப்புகள், பாதுகாப்பு , மீட்பு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்படுகிறது.

அவற்றில் சில:
மத்தேயு 19: 26 யெஷூஆ, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

பாடல் 115: 3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.


பாடல் 33: 6
யாவேயுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
(பாடல் 77: 15, வெளி 19: 6, 2 கொரி 13: 4, எபிரெயர் 1: 3, 2 ராஜா 17: 36, யோவான் 10: 27 – 29, எபே 3: 20)

05. தேவன் மாறாதவர். - God is Immutable


மாறாதவர் என்பது – அவரது இயல்பில், தன்மையில் அசையாமல் நிலைத்திருப்பவர் என்பதைக் குறிக்கிறது.

மல்கியா 3: 6
நான் யாவே, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் பிள்ளைகளாகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.


தேவன் கடந்த காலத்தில் ஒருவராகவும், நிகழ்காலத்தில் ஒரவராகவும், எதிர்காலத்தில் இன்னொருவராகவும் மாறுவதில்லை. அவர் மாறாதவராகையால் அவருடைய வார்த்தைகளும் மாறாதவைகள்.

பாடல் 33: 11
யாவேயுடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.


பாடல் 102: 25 – 27
நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் செயலாயிருக்கிறது.

அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் உடப்பைப்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.

நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.


ஏசாயா 46: 9 – 11
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் ,இல்லை நானே தேவன், எனக்குச் சமானமில்லை.

முடிவிலுள்ளவைகளை ஆரம்பமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

இறை தேடுகிற ஒரு பறவையை கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.


யாக்கோபு 1: 17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

தேவன் மாறாதவர் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வது, தேவனுடைய வார்த்தையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு, நமக்கு நம்பிக்கையையும் பெருகப்பண்ணுகிறது.


06. தேவன் அன்பாக இருக்கிறார். - God is Love


தேவன் அன்பு உள்ளவர் அல்ல. அவர் அன்பாக இருக்கிறார். அதனால் அன்பு எல்லாமே தேவன் என்று கூறமுடியாது.

1 யோவான் 4: 8
அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார்.

உதாரணம் : உப்பு – உவர்ப்பு, சீனி - இனிப்பு இதை நாம் மாற்ற முடியாது. அது போல அன்பு தேவனுடைய இயற்கையான இயல்பு. இந்த அன்பானது நிபந்தனையற்றது, எதிர்பார்;ப்புகள் இல்லாதது தன்னலமற்ற தியாக அன்பு.


யோவான் 17: 24
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.


யோவான் 3: 35
பிதாவானவர் மகனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.


1 யோவான் 4: 9, 10
தம்முடைய ஒரேபேறான மகனாலே நாம் வாழும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய மகனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.


ரோமர் 5: 5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.


நாம் பாவிகளாயிருக்கையில் தம்முடைய சொந்த மகன் என்றும் பாராமல் அவரை நமக்காக ஒப்புக்கொடுத்ததன் மூலம் தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாம் அவரிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியினால் அப்படிச் செய்தார்.

நாம் நம்முடைய அன்பை கீழ்ப்படிதல் மூலம் நிரூபிக்க வேண்டும். நாம் தேவனுடைய அன்பைப் பெற்றவர்களாக, செய்யவேண்டிய பொருத்தமான விடயம் ஒருவரிலொருவர் அன்புகூற வேண்டும்.

யோவான் 14: 31
நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.


1 யோவான் 5: 3
நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளுமல்ல.


மத்தேயு 22: 37 – 39
யெஷூஆ அவனை நோக்கி: உன் தேவனாகிய யாவேயிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு உள்ளான மனுஷனோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக

இது முதலாம் பிரதான கட்டளை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.


1 யோவான் 4: 11
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.


07. தேவன் பரிசுத்தர் - God is Holy


தேவனுடைய சுபாவம் பரிசுத்தம்.

பரிசுத்தம் என்பதற்கு 'பிரித்தெடுக்கப்பட்ட' என்று அர்த்தமாம். பரிசுத்தம் என்பது எபிரெய சொல் 'கொடேஷ்' (Kodesh) இதிலிருந்து வந்தது.

தேவன்; பரிசுத்தத்தில் வளர்ச்சியடைய வேண்டியதில்லை. அவர் பரிசுத்தமாகவே இருக்கிறார்.

அவர் பரிசுத்தத்தில் நிறைவுள்ளவராயிருக்கிறார்.

தீர்க்கதரிசி ஏசாயாவின் புத்தகத்திலே, சேராபீன்கள் தேவனுக்கு முன்பாக நின்று இரவும் பகலும் ஓயாமல் என்ன கூறினார்கள் என்று நாம் பார்க்கலாம்.

ஏசாயா 6: 1 – 3
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், எஜமான் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய உடுப்பின் ;தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன் அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து

ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் யாவே பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.


அவருடைய பரிசுத்தத்திற்கு முன்பாக யாருமே நிற்கமுடியாது. அதனால் தான் சேராபீன்கள் தங்கள் முகங்களையும், கால்களையும் மூடிக்கொண்டது. தீர்க்கதரிசி ஏசாயாவும் ' நான் செத்தேன் ' என்று கத்தினான்.

அதியுயர்ந்த தேவனைவிட பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர் ஒருவருமில்லை.

பயணம் 15: 11
யாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?


ஏசாயா 57: 15
நித்தியமுள்ளவரும்; பரிசுத்தர் என்கிற பெயருள்ளவருமாகிய மகத்துவமும் அதியுயர்ந்தவருமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த இடத்திலும் குடியிருக்கிற நான், தாழ்ந்தவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு தாழ்ந்த இருதயமுள்ளவர்களிடத்திலும் குடியிருக்கிறேன்.


பாடல் 5: 4 - 7
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.

பெருமைக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.<

பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

நானோ உமது மிகுந்த தயவினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த பிரசன்னத்திற்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.


தேவன் பரிசுத்தராய் இருக்கிறபடியால், தம்முடைய ஜனங்களும் அவரைப்போல இருக்க விரும்புகிறார். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை காண முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

லேவியர் புத்தகம் 19: 2
நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யாவேயுமாயிருக்கிற நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.


1 பீற்றர் 1: 14, 15
நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.


எபிரெயர் 12: 14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் யாவேயைக் காண்பதில்லையே.


2 கொரிந்தியர் 7: 1
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.


எனவே தேவன் தமது வார்த்தைகள், யோசனைகள், செயல்கள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக (பிரித்தெடுக்கப்பட்டவராக) இருக்கிறாரோ, அதேபோல நாமும் பரிசுத்தமான (பிரித்தெடுக்கப்பட்ட) வாழ்க்கை வாழ வேண்டும்.

8. தேவன் உண்மையுள்ளவர். - God is Truthful


தேவன் உண்மையுள்ளவர் என்றால் அவரிடத்தில் பொய், மாயாமலம் இல்லை. உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுவார்.

அவர் கூறியவைகள், வெளிப்படத்தியவைகள் அனைத்தும் உண்மை.
உண்மையான ஒரே தேவன் அவர் தான் வேறுயாருமில்லை.

யோவான் 17: 3 ஒன்றான உண்மையான தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய யெஷூஆ மெஷாயாவையும் அறிவதே நித்திய வாழ்க்கை.


தேவனே உண்மையின் ஆதாரமும் நிலையுமானவர். தேவனைத் தவிர வேறு எந்த மிக உயர்ந்த ஆதாரமோ அல்லது தரமோ உண்மையைப் பொறுத்தவரையில் இல்லை.

எரேமியா 10: 10
யாவேயோ உண்மையான தேவன் அவர் உயிருள்ள தேவன், நித்திய ராஜா அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடும் கோபத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.


பாடல் 119: 160
உம்முடைய வார்த்தை சமூலமும் உண்மை, உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.


யோவான் 17: 17
உம்முடைய உண்மையினாலே அவர்களைப் பிரித்தெடும் உம்முடைய வார்த்தையே உண்மை.


ரோமர் 3: 3, 4
சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ

அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வார்த்தைகளில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே உண்மையுள்ளவர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.


எபிரெயர் 6: 18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.


இதிலே இரண்டு மாறாத விசேஷங்கள் என்று கூறப்பட்டிருப்பது :

01. அதியுயர்ந்த தேவன்

02. அவருடைய வார்த்தை

தேவன் உண்மையுள்ளராய் இருக்கிறபடியால், அவரைப் பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவரும் உண்மையப் பேசி, யோவான் 18: 37ன் படி உண்மையைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

09. தேவன் நம்பிக்கைக்குரியவர் - God is Faithful


தேவன் நம்பிக்கைக்குறியவர் என்றால், தேவனைவிட நம்பக்கூடிய ஒரு அள் இல்லை. அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் நம்பலாம். அவர் சொன்னது எல்லாவற்றையும் செய்வார். அவர் கொடுத்த வாக்குகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று அர்;த்தமாகும்.

அவர் தமக்கும், தமது வார்;த்தைகளுக்கும், தமது ஜனங்களுக்கும் நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார் என்பது உறுதி.

தேவன் தாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு உண்மைத்தன்னையாக இருப்பது மட்டுமல்லாமல், தம்மைப் பற்றியும் தமது சிருஷ்டிப்புகள் பற்றியும் கூறிய அனைத்தும் உண்மையும், நம்பிக்கையும் கொண்டவை.

2 தீமொத்தேயு 2: 13
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.


நாம் சொல்லிவிட்டு சிலகாரியங்களை செய்யமாட்டோம். ஆனால் தேவன் அப்படியல்ல. அதைத்தான் இந்த வார்த்தை கூறுகிறது.

நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணி, அதை செய்யமல் போனால் உன்னிடத்தில் உண்மையில்லை.

(உப புத்தகம் 23: 21, பிரசங்கி 5: 4)

எபிரெயர் 11: 11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.


1 கொரிந்தியர் 1: 9
தம்முடைய மகனும் நம்முடைய எஜமானுமாயிருக்கிற யெஷூஆ மெஷாயாவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.


பாடல் 36: 5
யாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.


புலம்பல் 3: 22, 23
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது யாவேயுடைய இரக்கமே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.


1 பேதுரு 4: 19
ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் இருதயங்களை உண்மையுள்ள சிருஷ்டி யாவேயாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.


இஸ்ராயேலருடனான தேவனுடைய செயற்பாடுகளில் தேவனுடைய நம்பிக்கைக்குரிய தன்மையை மிகவும் சிறப்பாக நாம் காணமுடியும். சில இடங்களில் இஸ்ராயேலருக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் இனிவரும் காலங்களில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

நிச்சயமாக முடிவுண்டு அவர்கள் நம்பிக்கை வீண் போகாது.

தேவன் நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறபடியால், கட்டாயம் அதை நிறைவேற்றுவார்.

உப புத்தகம் 7: 9
ஆகையால் உன் தேவனாகிய யாவேயே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,

யோசுவா 21: 45
யாவே இஸ்ராயேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.


பாடல் 89: 33 - 36
ஆனாலும் என் தயவை அவனைவிட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.

என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.

ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.


தேவன் நம்பிக்கைக்குரியவர் என்கிற அவருடைய சுபாவமானது, இஸ்ராயேல் ஜனங்களுக்கு தேவன் எப்படி உண்மையுள்ளவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தாரோ, அதேபோல நமக்கும் அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார் என்ற உறுதியான நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது. அத்தோடு தேவன் நம்பகமானவர் என்று நமக்கு நிரூபிக்கிறது.

10. தேவன் இரக்கமுள்ளவர்.- God is Merciful


நாம் பாவிகளாயிருந்தாலும், பாவிகளுக்கு தகுதியான தண்டனையை தேவன் உடனடியாக கொடுக்காமல், தற்காலிகமாக அதை தள்ளிவைத்து தமது இரக்கத்தை நமக்குக் காட்டுகிறார். ஆனால் தேவனுடைய இரக்கமும், மன்னிப்பும் முடிவடையும் ஒரு நாள் வரும்.

தேவனுடைய இரக்கங்களை மூன்று பகுதிகளாக பிரிக்கமுடியும்.

01.தேவனுடைய இரக்கமானது விசுவாசிகள், அவிசுவாசிகள் என அனைத்து மனிதர்களுக்கும் மட்டுமல்லாமல், அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.

பாடல் 145: 9
யாவே எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் வேலைகளின்;மேலுமுள்ளது.


02.மனுஷனுடைய தவறுகளையும், பாவங்களையும் பாராமல் தேவன் கொடுக்கும் சிறப்பான எல்லையற்ற இரக்கம்.

மத்தேயு 5: 45
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.


03.அதிகாரப் பூர்வமான இரக்கம்.

தீத்து 3: 5
நாம் செய்த நீதியின் செயல்கள் நிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை விடுவித்தார்.


அவர் சூழ்நிலைகளைப் பார்த்து மனதுருகுவார்.

உதாரணம் : மூன்று நாட்கள் சாப்பாடில்லாமல் தங்கியிருந்தவர்களுக்கு, அவர்கள் மேல் மனதுருகி, ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் பெருகப்பண்ணினார்.

பாவத்தால் தங்களுடைய வாழ்க்கையை சீரழித்தவர்கள் மனம் திரும்பும்போது, அவர்களை சேர்த்துக்கொள்ள மிகுந்த இரக்கமுள்ளவராயிருக்கிறார். உதாரணமாக : லூக்கா 15: 11 – 24ல் மனந்திரும்பி வருகிற மகனைக் தகப்பன் மனதுருகி அவனை சேர்த்துக்கொள்ளும் விதத்தை நாம் வாசிக்க முடியும். (ஏசாயா 55: 7)

தேவன் தாம் விரும்பியவர்களுக்கு இரக்கம் காட்ட சுதந்திரமாக உள்ளார்.
பயணப் புத்தகம் 34: 6
யாவே அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: யாவே, யாவே இரக்கமும், தயவும், நீடிய சாந்தமும், மகா தயையும், உண்மையுமுள்ள தேவன்.


ரோமர் 9: 15, 16
அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.


தேவனோடு நெருக்கமான உறவு கொண்டு, அவருடைய இரக்கத்தை அறிந்த தாவீது இவ்வாறு கூறியிருக்கிறான்.

2 சாமுஎல் 24: 14
அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் யாவேயினுடைய கையிலே விழுவோமாக அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.


பாவத்தினாலே செத்தவர்களாய் இருந்த நாம் ஒவ்வொருக்கும் தேவன் காட்டிய மிகுந்த இரக்கத்தை நாம் இதிலே காணலாம்.

எபேசியர் 2: 1 – 5
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் செத்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

அவைகளில் நீங்கள் முந்தின காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது செயலாற்றுகிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முந்தின காலத்திலே நமது உடலின் இச்சையின்படியே நடந்து, நமது உடலும்; மனதும்; விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

தேவனோ இரக்கத்தில் நிறைவுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் செத்தவர்களாயிருந்த நம்மைக் மெஷாயாவுடனேகூட உயிர்ப்பித்தார்; இரக்கத்தினாலே விடுதலையாக்கப்பட்டீர்கள்.

(மத்தேயு 9: 27, 2 கொரிந்தியர் 1: 3 – 4, 1 பேதுரு 1: 3 – 4)

நாம் பாவிகளாய்; இருக்கும் போதே, தேவன் தமது இரக்கத்தைக் கொடுக்கிறார் என்றால், நாம் மனம் திரும்பி தேவனுடைய பிள்ளைகளானால் அவருடைய இரக்கத்தை நேரடியாகவே பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும்.

11. தேவன் தயவுள்ளவர். - God is Gracious


தயவு என்பது பாவிகளுக்கு வரவேண்டிய தண்டனை, கோபாக்கினையை கொடுக்காமல் அவர்களுக்கு விடுதலையையும், நித்திய வாழ்க்கையையும் கொடுப்பதாகும்.

தேவனுடைய நன்மைக்கு முற்றிலும் தகுதியற்றவர்களுக்கும், அதை பெற முடியாதவர்களுக்கும் தேவன் தயவைக் காட்ட விரும்புகிறார்.

தேவன் பாவிகளை விடுவிக்கக்கூடிய ஒரே வழி தயவு. உண்மையான விடுதலை தேவனுடைய தயவின் மூலம் வருவதால், மனுஷர்களின் செயல்களுக்கு எந்த இடமுமில்லை.

விசுவாசிகள் அனைவரும் தேவனுடைய தயவினாலே (Grace)
விடுதலையாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேவனுடைய தயவை புரிந்து கொள்வதிலும், பயன்படுத்துவதிலும் நாம் வளர வேண்டும்.

கடினமான, நெருக்கமான சூழ்நிலைகளில் தேவனுடைய பிள்ளைகளை தாங்கிப் பிடிப்பது இந்த தயவு தான்.

எல்லா விடுதலைகளும் தேவனுடைய சர்வவல்லமையுள்ள தயவினாலே நிறைவேற்றப்படுகிறது.

ரோமர் 3: 24
இலவசமாய் அவருடைய தயவினாலே மெஷாயா யெஷூஆவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;.


ரோமர் 11: 6
அது தயவினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிராது அப்படியல்லவென்றால், தயவானது தயவல்லவே!. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது தயவாயிராது அப்படியல்லவென்றால், செயல்களானது செயல்களல்லவே


எபேசியர் 2: 9
தயவினாலே விசுவாசத்தைக்கொண்டு விடுதலையாக்கப்பட்டீர்கள் இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது செயலினால்; உண்டானதல்ல.


எபேசியர் 1: 7
அவருடைய தயவின் நிறைவின்;படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.


தீத்து 3: 7
தமது தயவினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய நித்தியவாழ்க்கை உண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக அவர் நமது இரட்சகராகிய யெஷூஆ மெஷாயாவின் மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை ( தேவனுடைய ஆவி) நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.

(2 பேதுரு 3: 18, 2 கொரிந்தியர் 12: 9)

எனவே விடுதலை என்பது தயவின் அடிப்படையாக இருப்பதனால், நாம் பெருமை பாராட்டவோ அல்லது உரிமை கொண்டாடவோ எந்த இடமும் இல்லை. மேலும் தேவன் நமக்குள் செய்யும் எந்த காரியத்திற்கும் நாம் சொந்தக்காரராக முடியாது. தேவன் செய்த தயவோடு எமது சொந்த செயல்களை சேர்க்க முயற்சிப்பது தவறான காரியமாகும்.

12. தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார். - God is Righteous and Just


தேவன் எந்த நேரமும் சரியான, உண்மையான மற்றும் நியாயமான முறையில் செயற்படுகிறவர்.

அவர் பக்கசார்பற்ற நடுநிலையானவராகவே இருக்கிறார்.

தேவன் நீதியும் நேர்மையும் உள்ளவர் என்பதால், மக்களை தூய்மையான அளவுகொலின்படி நடத்துவது அவருக்கு அவசியமாயிருக்கிறது.

நம்முடைய பாவங்களுக்கு ஏற்ப அவர் தமது நீதியை மாற்றி ஒத்துப்போகிறவரல்ல.

ஆதாமுக்கு தேவன் இரண்டு வேலைகளைக் கொடுத்தார்.

01.ஏதேன் தோட்டத்தை பண்படுத்துவது

02.தோட்டத்தை பாதுகாப்பது

ஆதாம் இதை செய்யாதபடியினால் பாம்பு உள்ளே வந்து ஏவாளை வஞ்சித்தது. ஆதாமும் தெரிந்துகொண்டே பாவம் செய்தான்.

இருவரும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே துரத்தப்பட்டார்கள்.

நீயும் 'தேவனுக்கு எல்லாம் தெரியும் தானே' என்று சொல்லிக்கொண்டு, உன் பக்கம் செய்யவேண்டியதை செய்யாமல் விட்டால், நீயும் பிசாசினாலே நிச்சயமாய் தாக்கப்படுவாய்.

அதன்பிறகு தேவனை குற்றம் சாட்ட முடியாது. ஏன்? அவர் நீதியுள்ளவர்.

அவருடைய படைப்புக்களான நாம் அறிவியல் ரீதியாக, தேவனுடைய நீதியைக்குறித்து கேள்வி கேட்க எந்தவிதமான உரிமையும் இல்லை.

அவ்வாறு செய்வது தேவன் தமது வழிகளில் சரியானவரா? அல்லது நீதியானவரா? என்று நாம் அவரை கேள்விகேட்பதாக இருக்கும்.

பாடல் 11: 7
யாவே நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

பாடல் 89: 14
நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; தயையும் உண்மையும் உமக்கு முன்பாக நடக்கும்.


உப புத்தகம் 32:4
அவர் கன்மலை; அவர் செயல்கள் உத்தமமானது அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத உண்மையுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.


ஆரம்பப்புத்தகம் 18: 25
துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.


ரோமர் 3: 21
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.


ரோமர் 3: 25, 26
தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், யெஷூஆவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,

மெஷாயா யெஷூஆவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.


ரோமர் 9: 20, 21
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட சிருஷ்டி உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?


1 யோவான் 1: 9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.


வெளி 16: 4 – 7
மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.

அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.

அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய யாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.


தேவன் நம்மிடம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்கிறவர் என்பதை நாம் உணர்ந்து கொண்டோமானால், நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சூழ்நிலையையும் இலகுவாக மேற்கொள்ள முடியும்.

அதேபோல இந்த உலக வாழ்க்கையில் பலர் தவறுகளை, அநியாயங்களை செய்துவிட்டு தப்பித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் தேவனுடைய நீதியான கடும் கோபம் வெளிப்படும்போது, அனைவரும் கணக்கு கேட்கப்பட்டு, அவர்களுக்குரிய தண்டனையைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

13. தேவன் நல்லவர். - God is Good


தேவன் தமது படைப்புக்கள் அனைத்திற்கும் நல்லவராகவே இருக்கிறார். அனைவருக்கும் இரக்கத்தையும் தயவையும் காண்பிக்கிறார்.

மனிதர்கள் தம்மை நம்பினாலும் நம்பாமல் விட்டாலும் பாகுபாடின்றி பொதுவான அன்பையும், ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார். அத்தோடு மழை, சூரிய ஒளி, பயிர்வகை மற்றும் எமது அன்றாட தேவைகளை வழங்குவதன் மூலம் தம்முடைய பொதுவான நன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேவன் நல்லவர் ஏனென்றால் அவர் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மேலாக நல்லவராக இருக்கமுடியும் என்பதாகும். அவர் எதற்கும் குறைவாக இருக்க முடியாது.

தேவனிடம் தீமையோ, பாவமோ இல்லாதபடியினால் அவருடைய கோபம், தீர்ப்பு, தண்டனை கூட அவரது பார்வையில் நன்மையானதாகவே இருக்கிறது.

பாடல் 33: 5
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யாவேயுடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.


பாடல் 103: 1 – 5
என் இருதயமே, யாவேக்கு நன்றிசொல் என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயருக்கு நன்றி சொல்.

என் இருதயமே, யாவேக்கு நன்றிசொல் அவர் செய்த சகல நன்மைகளையும் மறவாதே.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

உன் உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் தயவினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலிப வயது போலாகிறது.


பாடல் 145: 9
கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் ,இரக்கங்கள் அவருடைய எல்லாக் வேலைகளின்மேலுமுள்ளது.


பாடல் 145: 15, 17
எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு சாப்பாடு கொடுக்கிறீர்.

நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

யாவே தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் தயையுள்ளவருமாயிருக்கிறார்.


நெகேமியா 1: 7
நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் வாழ்ந்தோம்;; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த விதிமுறைகளுக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும்; கீழ்ப்படியாதேபோனோம்.


மத்தேயு 5: 45
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு பிள்ளைகளாயிருப்பீர்கள். அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.


யாக்கோபு 1: 17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.


ரோமர் 2: 4
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் நிறைவை அசட்டைபண்ணுகிறாயோ?


நம்முடைய பாவங்களையும், கீழ்ப்படியாமையையும், பெலவீனங்களையும் நாம் உணர்ந்து கொள்ளும்போது, நாம் தகுதியற்ற நிலையில் இருக்கம் போதும் தேவன் காட்டிய அன்பையும், ஆசீர்வாதங்களையும் யோசித்தப்பார்த்து நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான காரியமாகும்.

எனவே தேவனுடைய பிள்ளைகளுக்கு வருகிற ஒவ்வொரு சூழ்நிலைகளும் இறுதியில் நன்மைக்கேதுவாக இருக்கும் என்பது உறுதியானது.

ரோமர் 8: 28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.


தேவனைப் பற்றியும் அவர் வெளிப்படுத்திய அவருடைய சுபாவங்களைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டது மிகவும் சிறிதளவுதான். ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் பூமியிலே, யெருஷலேமில் நிலைநாட்டப்பட்டதன் பின்பு தேவனுடைய எல்லையற்ற மேன்மையையும், அவருடைய சுபாவங்களைப் பற்றியும் நாம் ஒவ்வொருநாளும் மிகத் தெளிவாகவும் சந்தோஷத்துடனும் கற்றுக்கொள்ள முடியும். அவரே அதை நமக்குக் கற்றுக் கொடுப்பார். இதுவே எங்களது உறுதியான அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.